பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சிஐடியு நடத்திய தொடர் முழக்கப் போராட்டம்!
ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்களுக்கு 30 சதவிகிதம் ஊதிய உயர்வு கேட்டு புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் புதுக்கோட்டையில் வியாழக்கிழமையன்று தொடர்முழக்கப் பேராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.முகமதலி ஜின்னா தலைமை வகித்தார். பி.ராமசாமி, ஏ.திரவியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநிலத் தலைவர் ப.சண்முகம் உரையாற்றினார்.
ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்களுக்கு 30 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு ஓய்வூதியப் பணிக்கொடைக்கான அரசாணையை வெளியிட வேண்டும். மூன்று ஆண்டுகள் பணிமுடித்த தொகுப்பூதிய துப்புரவு பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களை மாற்றி ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள் மற்றும் துப்புரப்புப் பணியாளர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு அரசாணையை உடனடியாக அறிவித்திட வேண்டும். அரசாணைப்படி ஊராட்சி தூய்மைக் காவலர்களுக்கு ஆண்டுமுழுவதும் வேலை வழங்க வேண்டும். சம்பளம் வழங்குவதில் உள்ள ஊழல், முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிககைகைள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.
- இரா.பகத்சிங்