தமிழ் திரையுலகில் 400க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 1,400 க்கு மேற்பட்ட பாடல்களை எழுதியவர் பிறைசூடன். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த இவர் அவருடைய சினிமா பயணத்திற்குப் பிறகு சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். எந்தவித உடல் நலக்குறைபாடும் இல்லாத நிலையில் இன்று மாலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் எழுதிய 'நூறுவருஷம் இந்த மாப்பிள்ளையும் பெண்ணும்தான்' பாடல் ஒலிக்காத திருமண வீடுகளே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவுக்கு மிக நல்ல பாடல்களைக் கொடுத்துள்ளார். கவிஞர் பிறைசூடனின் உயிரிழப்பு திரைத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவிஞர் பிறைசூடனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் என் ஊர்க்காரர் - உடன்பிறப்பு என தலைவர் கலைஞரால் புகழப்பட்டவர்; திருவாரூர் மண்ணிலிருந்து புறப்பட்டுத் திரையிசையில் தனக்கெனத் தனியிடம் பிடித்த கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், இரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.