
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. அதனைத்தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைமையிலான அரசின், 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி துவங்கியது. கரோனா பரவல் காரணமாக முன்புபோலவே சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், இன்று (24.06.2021) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், ''என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. நான் அண்ணாவின் அரசியல் வாரிசு; கருணாநிதியின் கொள்கை வாரிசு. ஆளுநர் உரை ட்ரெய்லர்தான். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஒவ்வொன்றாக நிறைவேற்றிவருகிறோம். ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவருகிறோம்.
பிப்ரவரி 26முதல் மே 6வரை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அதிமுக மறந்துவிட்டதா? ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற திரைப்படத்தைப் போல இடைப்பட்ட காலத்தில் (பிப்ரவரி 26 முதல் மே 6 வரை) அதிமுக நடவடிக்கைகளை எடுக்க மறந்துவிட்டதா. மார்ச் 2ஆம் தேதிவரை தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு அதிமுகவே காரணம். கரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாது என எடப்பாடி பழனிசாமி கையை யாரும் கட்டவில்லை. ஆட்சிக்கு வரப்போவதில்லை என தெரிந்து அதிமுக அலட்சியமாக இருந்தது. திமுக யாருக்கும் அடங்கிய யானை இல்லை; யாராலும் அடக்க முடியாத யானை. அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள். திமுக அடக்கமுடியாத யானை. யானையும் இல்லை மணியோசையும் இல்லை.
சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும், புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும். வேளாண் சட்டம், குடியுரிமைச் சட்டம், கூடங்குளம், மீத்தேன், நியூட்ரினோ, சேலம் எட்டு வழி சாலைக்கு எதிராகப் போராடிய போராட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும். கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் போடப்பட்ட வழக்குகளைத் தமிழக அரசு திரும்பப் பெறும்.
வட மாவட்ட தொழில் வளர்ச்சியை அதிகரிக்க செய்யாறு, திண்டிவனத்தில் இரண்டு பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும். 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் இரண்டு தொழிற்சாலைகள் நிறுவப்படும். திருக்கோயில்களுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்” என அறிவிப்புகளை தொடர்ந்து வாசித்தார்.