
சென்னையில் இன்று (06/06/2022) மாலை நடைபெற்ற முத்தமிழ் பேரவையின் 41- ஆம் ஆண்டு விழாவில் இயல் செல்வம் விருதினை ஜெய்பீம் திரைப்பட இயக்குநர் த.செ. ஞானவேலுக்கும், இசை செல்வன் விருதினை ராஜ்குமார்பாரதிக்கும், ராஜ ரத்னா விருதினை பத்மஸ்ரீ ஷேக் மெஹபூப் கபானி மற்றும் பத்மஸ்ரீ காலீஷாபி மெஹபூப் ஆகியோருக்கும், நாட்டிய செல்வன் விருதினை பத்மபூஷன் வி.பி.தனஞ்சயன் மற்றும் பத்மபூஷன் சாந்தா தனஞ்செயன் ஆகியோருக்கும், நாதஸ்வர செல்வம் விருதினை நாகேஷ் ஏ.பப்புநாடுவுக்கும், தவில் செல்வம் விருதினை பா.ராதாகிருஷ்ணனுக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மக்களுக்காக கலைகள் இருக்க வேண்டும், கலையில் மூட நம்பிக்கைகளை விதைக்கக் கூடாது. இசை நிகழ்ச்சிகளில் தமிழ் பாடல்களை மட்டுமே பாட வேண்டும் என்று வலியுறுத்திய இயக்கம் தி.மு.க. சினிமா பாடல்களைப் பாடும் அளவுக்குத்தான் எனக்கு இசை ஆர்வம் உண்டு. திராவிட இயக்கத்தால் தான் தமிழ் இசை வளர்ச்சிப் பெற்றது. முத்தமிழறிஞர் கலைஞரால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் முத்தமிழ் பேரவை. இசையானது பல பரிமாணங்களை அடைந்துள்ளது.
என்னுடைய அருமை நண்பர் நடிகர் சூர்யா ஜெய்பீம் படத்தைப் பார்க்க வேண்டும் என சொல்லி எனக்கு அழைப்பு விடுத்தார். படத்தைப் பார்த்துவிட்டு 2, 3 நாட்கள் நான் தூங்கவே இல்லை. என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் 'ஜெய்பீம்' அந்த படம் பலரது மனச்சாட்சியை உலுக்கியது" எனத் தெரிவித்தார்.