Skip to main content

சிகாகோவில் தமிழர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

Published on 16/08/2024 | Edited on 16/08/2024
Chief Minister MK  Stalin meeting with Tamils ​​in Chicago

தமிழக அரசின் சார்பில் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரம்180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்க்க ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார்.

அதாவது தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது முதல்வரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட்  28ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை சான்பிரான்சிஸ்கோவில் முன்னணி நிறுவனத் தலைவர்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 29ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோ நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

Chief Minister MK  Stalin meeting with Tamils ​​in Chicago

இந்நிலையில் செப்டம்பர் 7ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள தமிழர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சிகாகோவில் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வணக்கம் அமெரிக்கா..... தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக சிகாகோ நகரில் அமெரிக்க வாழ் தமிழர்களுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு செப்டம்பர் 7ஆம் தேதி (07.09.2024) நடைபெறவிருக்கிறது. அமெரிக்க வாழ் சொந்தங்களே சிகாகோவில் சந்திப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்