Skip to main content

மதுரையின் பெருமைகளைப் பட்டியலிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 08/08/2024 | Edited on 08/08/2024
Chief Minister MK Stalin listed the pride of Madurai

மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் 'மா மதுரை' விழாவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (08.08.2024) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து உரையாற்றினார். அதில், “திங்களைப் போற்றுதும்... திங்களைப் போற்றுதும்... ஞாயிறு போற்றுதும்... ஞாயிறு போற்றுதும்... மாமழை போற்றுதும்... மாமழை போற்றுதும் என்று சிலப்பதிகாரம் தீட்டிய இளங்கோவடிகள் எழுதினார்!. இப்போது, "மா மதுரை போற்றுவோம்! மா மதுரை போற்றுவோம்!"- என்று வேள்பாரி தீட்டிய எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பி. நிகழ்ச்சியை நடத்துகிறார்.

எல்லாருக்கும் அவர் அவர்களின் ஊர் பெருமைக்குரியதுதான்; போற்றுதலுக்குரியதுதான். அதிலும் குறிப்பாக, மதுரை மாநகர் என்பது பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்டது என்று நான் அதிகம் விளக்கத் தேவையில்லை. இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை. இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்டது மதுரை. பாண்டிய மன்னர்கள் தலைநகராக ஆட்சி செய்த நகரம். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன் ஆட்சி செய்த நகரம். ‘தவறு செய்தவன் மன்னனே ஆனாலும்’ மன்னனைக் கண்ணகி கேள்வி கேட்ட மண் இது. நீதியைக் காக்க தன்னுடைய உயிரையே தந்த மன்னர் ஆட்சி செய்த இடம் இது. திருமலை நாயக்கரும், ராணி மங்கம்மாளும் ஆண்ட பூமி இது. புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கும் கோயில் நகரம் இது. அனைத்துக் கலைகளும் ஒருங்கே இருக்கும் பண்பாட்டுச் சின்னமாக இந்தக் கோவில் கருதப்படுகிறது. புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா, மாபெரும் பண்பாட்டு விழாவாக இது நடைபெற்று வருகிறது. 1866-ஆம் ஆண்டே நகராட்சியாக ஆன ஊர் இது.

Chief Minister MK Stalin listed the pride of Madurai

சென்னைக்கு அடுத்ததாக இரண்டாவது மாநகராட்சியாக 1971 ஆம் ஆண்டு மதுரையைத்தான் மாநகராட்சி ஆக்கினார் அன்றைய முதலமைச்சர் கலைஞர். அண்ணல் காந்தி தன்னை அரையாடை மனிதராக மாற்றிக்கொண்ட இடமும் இந்த மதுரை தான். ஏன் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய தி.மு.க. இளைஞரணி தொடங்கப்பட்டதும் இந்த மதுரை மண்ணில் இருந்துதான். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அதனால்தான், பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்ட நகரம் என்று மதுரையை, குறிப்பிட்டேன். இத்தகைய மதுரையை மதுரைக்காரர்கள் மட்டுமல்ல; எல்லோரும் போற்றலாம்; மதுரையைப் போற்றுவோம் என்று கொண்டாடலாம். வைகையைப் போற்றுவோம், மாமதுரையைப் போற்றுவோம் போன்ற தலைப்புகளில் இது நடந்துகொண்டு வருகிறது. இந்த விழா நடக்கும் நாட்களில் மதுரை மாநகர் புத்துயிர் பெறுகிறது என்றே சொல்லலாம்” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மதுரையிலிருந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ். சங்கீதா, மதுரை காவல் ஆணையர் ஜெ. லோகநாதன், மாநகராட்சி ஆணையர் சி. தினேஷ்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்