சிதம்பரத்தில் சாமி சகஜானந்தா பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு கார்ல்மார்க்ஸ், சமூக நீதி, இட ஒதுக்கீடு, திராவிட இயக்கங்கள் குறித்து தவறாக பேசியதை கண்டிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைத்த அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் வி.எம். சேகர் தலைமை தாங்கினார்.
காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அரங்க. தமிழ் ஒளி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் வ.க. செல்லப்பன், பால.அறவாழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராஜா, மதிமுக நகர செயலாளர் குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் தமிழ்முன்சாரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சட்ட சட்டமன்ற தொகுதி செயலாளர் குமரன், தமுமுக அசுருதீன், முஸ்லிம் லீக் ஜக்ரியா, மனித நேய மக்கள் கட்சி ரபீக் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் பேசுகையில், தமிழக ஆளுநர் அரசமைப்பு சாசன பாதுகாப்பு பொறுப்பில் இருக்கும் நிலையில் சொந்த கருத்தை பரப்புவதற்காக ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி வருகிறார். இடதுசாரி, சிறுபான்மை, திராவிட இயக்கங்களை, தீயசக்தி என பேசுகிறார். தனிப்பட்ட நிகழ்ச்சிக்கு வரும்போது அவருக்கு அரசு சார்பில் வரவேற்றுள்ளனர், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்துள்ளனர். தவறான விஷயம். வள்ளலாரை சனாதன சிந்தனையாளராக உருவப்படுத்தி ஒரு திரிபு வாதத்தின் மூலம் அவரை இழிவுப்படுத்தி வருகிறார். இதனை அனைத்து கட்சிகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். ஆளுநரின் பேச்சை கண்டித்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் சிதம்பரத்தில் விரைவில் மாபெரும் பொதுமக்களை திரட்டி பொதுக்கூட்டம் நடத்தப்படும்.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் மேம்பட வேண்டும். உரிய முறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழக அரசு மருத்துவர்களை நியமிக்க உத்தரவிட்டது ஆறுதலையும் மகிழ்ச்சியும் தருகிறது. இதற்காக தமிழக முதல்வரையும், சுகாதாரத்துறை அமைச்சரையும் வாழ்த்துகிறோம். சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இந்த மருத்துவக் கல்லூரி மேம்படுத்துவதற்கான வசதிகள் குறித்து அனைத்து கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் முதல்வரை சந்தித்துச் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை சுங்க சாவடியில் சாலை பணிகள் சரியாக முடியாமல் பல இடங்களில் இணைப்பு சாலைகள் போடாமல் சுங்க வரி கட்டணத்தை வாங்குகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தை அலட்சியப்படுத்தும் ஒன்றிய அரசைக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. டோல்கேட் முற்றுகையிடும் போராட்டம் விரைவில் நடைபெறும் இதில் அனைத்துக் கட்சியினரும் கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார். இதனையே கூட்டத்தின் தீர்மானமாக நிறைவேற்றியதாகவும் தெரிவித்தார்.