அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் நீண்ட வருடங்களாகவே இருக்கின்றன. இது குறித்து புகார்கள் அரசின் பார்வைக்குப் பலமுறை அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. முந்தைய அதிமுக அரசு இதில் பெரிதாக அக்கறை காட்டவில்லை.
இந்தநிலையில், தற்போதைய திமுக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பயணியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, சோதனை ஓட்டமாகச் சென்னையில் 3 மாநகர பேருந்துகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. அது வெற்றிகரமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகர பேருந்துகளில் முதற்கட்டமாக சுமார் 2,350 பேருந்துகளில் கண்காணிப்பு சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் துவங்கியுள்ளன. இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வருகிறபோது பயணியர்கள் குறிப்பாகப் பெண் பயணியர்கள் அச்சமின்றி பயணிக்கலாம். பெண்களிடம் சில்மிஷம் செய்பவர்கள், பிக்பாக்கெட் அடிப்பவர்கள் உள்ளிட்ட கிரிமினல்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க இந்த திட்டம் மிகவும் பலனளிக்கும் என்கிறார்கள் போக்குவரத்துத்துறையினர்.