மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து நேற்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிமைத் தொகை திட்டம் குறித்துப் பேசியிருந்தார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது' எனத் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பது எப்படி? யார் யாருக்கு இந்த உரிமைத் தொகை கொடுக்கப்படும் என்பது தொடர்பான தகவல்கள் நேற்று வெளியாகியது. அதில், குடும்ப அட்டை உள்ளவர்கள் ரேஷன் கடைகளில் நடைபெறும் முகாமில் 21 வயது நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர். அந்த குடும்ப அட்டையில் ஒருவர் குடும்பத் தலைவியாக எடுத்துக்கொள்ளப்பட்டு கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ரூபாய் இரண்டரை லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு இந்த திட்டத்தில் இடமில்லை. மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரியக் கூடிய பெண்கள், சொந்த பயன்பாட்டிற்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனம் வைத்துள்ளவர்கள்; ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்; ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியங்கள் மற்றும் அரசிடமிருந்து பென்ஷன் பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறத் தகுதியற்றவர்கள். மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இந்த வகைப்பாட்டின் அடிப்படையில் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எந்தவித தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவார். பொருளாதாரத் தகுதிகளாக ஆண்டுக்கு வருமானம் இரண்டரை லட்சத்திற்குக் கீழ் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் வரும் ஜூலை மூன்றாம் வாரம் முதல் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஜூலை மூன்றாவது வாரத்தில் சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக நுகர்பொருள் வாணிபக் கழகம் சென்னை மாவட்டம், காவல்துறை குடிநீர் வழங்கல் வாரியம், கழிவுநீர் அகற்று வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக ஜூலை மூன்றாம் வாரத்தில் வார்டு வாரியாக முகாம்கள் நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்து இருக்கிறது. பயனாளிகளின் விவரங்களைத் தேர்வு செய்ய அதிக ரேஷன் குடும்ப அட்டை எண்ணிக்கை கொண்ட நியாய விலைக் கடைகள் கண்டறியப்படும். முகாம்கள் நடைபெறும் இடத்தில் குடிநீர் வசதி, மின் வசதி உட்படப் பல்வேறு வசதிகளை மேம்படுத்திக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முகாமிற்கும் ஒரு பொறுப்பாளர், ஒரு உதவி பொறுப்பாளர், சுகாதார மேற்பார்வையாளர் உட்படப் பல்வேறு தரப்பு அதிகாரிகள் வார்டுகளில் நடைபெறும் முகங்களை மேற்பார்வை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.