ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் வெளியாகி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இதனால் பாதிப்படைந்த விநியோகிஸ்தர்கள் கடந்த மூன்றாம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள இயக்குனர் முருகதாஸின் அலுவலகம் மற்றும் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்புறம் 15 க்கும் மேற்பட்ட விநியோகிஸ்தர்கள் ஒன்று சேர்ந்து இயக்குனர் முருகதாஸிற்கு எதிராக முழக்கங்கள் இட்டனர்.
இதனையடுத்து தனக்கும், வீடு மற்றும் அலுவலகத்திற்கும் தனிப்பட்ட முறையில் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் முருகதாஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நஷ்டத்திற்கு படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவை நாடாமல் தன்னை மிரட்டி வருவதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் இந்த மனு மீது காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. முருகதாஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திரைப்பட விநியோகிஸ்தர்கள் சார்பில் இயக்குனர் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், அந்த கடிதத்தில் இனி பிரச்சனைகள் ஏற்படாது எனவும் கூறப்பட்டுள்ளது எனவே முருகதாஸ் சார்பில் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு தரவேண்டும் என்ற மனுவை வாபஸ் பெற போவதாகவும் தெரிவித்தார்.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த புகார் தொடர்பாக 2 வழக்குகளின் கீழ் 15 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, நீங்கள் வேண்டும் என்றால் பாதுகாப்பு கேட்பீர்கள், நீங்கள் வேண்டாம் என நினைத்தால் இந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்க கூடாதா என கேள்வி எழுப்பினார். மேலும் நீங்கள் விருப்பப்படுவதுபோல் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா என கேள்வி எழுப்பி இயக்குனர் முருகதாஸுக்கு கண்டனத்தை தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.