சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த கேளிக்கை விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை கடந்த 28 ஆம் தேதி (28.03.2024) இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இது குறித்து சென்னை அபிராமபுரம் காவல்துறையினர், ‘அஜாக்கிரதையாக செயல்பட்டு பிறருக்கு மரணத்தை விளைவித்தல்’ என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த விபத்து தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் நடைபெறவில்லை என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (C.M.R.L.) சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்த அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் சதீஷ் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த கேளிக்கை விடுதியின் உரிமையாளர் அசோக்குமார் நேற்று (30.03.2024) இரவு அபிராமபுரம் காவல் நிலையத்தில் தனது வழக்கறிஞர்களுடன் சரணடைந்தார். இதனையடுத்து சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின் கேளிக்கை விடுதியின் உரிமையாளர் அசோக்குமார் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அசோக்குமாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், “தொடர்ந்து விடுதிகளை பராமரித்து வந்தோம். இருப்பினும் மெட்ரோ ரயில் பணிகளின் போது கட்டடங்களில் அதிர்வுகள் ஏற்பட்டன. இதே போன்ற அதிர்வுகள் அருகில் கட்டங்களிலும் ஏற்பட்டன. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் இரு முறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது”எனத் தெரிவித்துள்ளார்.