இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை நாளை (31.10.2024) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பொதுமக்கள் விமானம், ரயில், பேருந்து மற்றும் கார்கள் மூலம் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக உதகையிலிருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமான போக்குவரத்து நெரிசல் இருந்து வந்தது.
இந்நிலையில் நீலகிரி மாவட்ட குன்னூரைச் சேர்ந்த லெனின் என்பவர் பெங்களூரில் பணிபுரிந்து வருகிறார். இவர் தீபாவளி பண்டிகை கொண்டாடத் தனது சொந்த ஊருக்குத் தனது தாயுடன் திரும்பியுள்ளார். அதன்படி அன்று காலை பெங்களூரில் இருந்து காரில் புறப்பட்டு உதகை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம் சின்ன போஸ்ட் என்ற பகுதிக்கு வந்தபோது திடீரென முன்பக்கம் உள்ள சக்கரம் ஒன்று வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி அருகில் சென்ற பைக்கின் மீது கார் மோதியது.
அதோடு அருகில் உள்ள வீட்டின் கூரையை நோக்கி கார் பாய்ந்தது. இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் லெனினையும் அவரது தாயாரையும் உடனடியாக மீட்டனர். இந்த விபத்தில் அவர்களுக்குக் காயம் ஏதும் இன்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். அதே போன்று வீட்டில் இருந்தவர்களுக்கும் நல்வாய்ப்பாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டிற்குள் பாய்ந்த காரை கிரேன் மூலம் மீட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.