
மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் ஐ.டி நிறுவனத்தில் மேலாளராக உள்ள நிலையில் நேற்று கார்த்திகேயன், அவரது மனைவி லட்சுமி பிரியா, லட்சுமி பிரியாவின் தாய் மஞ்சுளா, குழந்தைகள் மித்ரா, யாஷினி ஆகியோருடன் காரில் ராமேஸ்வரம் சென்றுள்ளார். இன்று ஐந்து பேரும் மீண்டும் சென்னை திரும்பி வந்து கொண்டிருந்த நிலையில் அரியலூர் அருகே சாத்தமங்கலம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார்த்திகேயன், அவரது மனைவி லட்சுமி பிரியா, லட்சுமி பிரியாவின் தாய் மஞ்சுளா, குழந்தை மித்ரா ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இளைய மகள் யாஷினி பலத்த காயத்துடன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.