எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பெண்களின் மாதவிடாய் குறித்து எழுதிய கவிதை பெண் சமுதாயத்தை கொச்சை படுத்தும் விதமாகவும் இழிவு படுத்தும் விதமாகவும் இருக்கிறது என்பதைக்கண்டித்து , அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெமிலா என்ற பெண் மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று மாநகர காவல் ஆணையரை சந்திக்க வந்துள்ளேன் என்றும் கவிஞர் என்ற இடத்தில் இருப்பவர்கள் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக எழுதுவது மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
மேலும் சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் பெண்கள் குறித்த கவிதை எழுதியுள்ளார் என்றும் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை குறித்து ஆபாசமாக கவிதை எழுதியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பெண்களின் கழிவுகளை கொச்சைப்படுத்தும் விதமாக எழுதுவது யாரை திருப்தி செய்ய என்பது தெரியவேண்டும் என்றும் பெண் சமூதாயத்திற்காக இந்த முயற்சி எடுத்துள்ளதாகவும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜெமிலாவின் இந்த புகார் குறித்து நம்மிடம் பேசிய மனுஷபுத்திரன், ’’பெண்களுக்காக எழுதப்பட்ட மாபெரும் கவிதை இது ,வேண்டும் என்றே பழிவாங்கும் நோக்கத்தோடு இவர்கள் செயல் இருந்து வருகிறது.
நான் சொல்லப்பட்ட தேவி எனும் சொல் பொதுவான சொல். அது கடவுள் பற்றியது இல்லை. கமல் படத்தில் தேவி ஸ்ரீதேவி எனும் பாடல் கூட பாடப்பட்டது. அப்போது அது தவறா? அந்த கவிதையில் பெண்மையின் உயிர் கொள்ளும் இடம் அது என்று பெருமையாகும் எழுத்தப்பட்ட கவிதை இது ஒரு பொய் புகார்.
அப்படி இவர்கள் சொல்வதுபோல் பெண் மாதவிடாய் பற்றி பேசக்கூடாது என்றால் அது என்ன தடைசெய்யப்பட்ட சொல்லா, அப்படி பேச கூடாது என்பதே பெண்ணுக்கு எதிரான ஒன்று. பெண் பிரச்சனைகளை பற்றி வெளிப்படையாக ஊடகங்களில் வெளியிடுவது என்ன தவறா, இவர்கள் வேண்டும் என்றே பழிவாங்கும் நோக்கத்தோடு செய்கின்றனர்’’ என்றார்.