தமிழ்நாடு காவல்துறையின் 30வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு இன்று (30.06.2021) பதவியேற்றார். சென்னை மெரினாவில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் புதிய டிஜிபி சைலேந்திரபாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார் முன்னாள் டிஜிபி திரிபாதி.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்த சைலேந்திரபாபு எம்.எஸ்.சி விவசாயம், எம்.பி.ஏ, பி.எச்.டி உள்ளிட்ட படிப்புகளைப் படித்துள்ளார். சைபர் க்ரைம் ஆய்வு படிப்பையும் முடித்தவர். 1987ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான சைலேந்திரபாபு, இருபத்தைந்தாவது வயதில் தமிழ்நாடு காவல்துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் எஸ்.பி ஆகவும் சென்னை அடையாறில் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையில் ஐஜியாகவும் முத்திரை பதித்தவர். சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக இருந்தபோது பல ரவுடிகளின் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் சைலேந்திரபாபு. 2010இல் கோவை ஆணையராக இருந்தபோது பள்ளி குழந்தைகளைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளி, இவர் தலைமையில் என்கவுண்டர் செய்யப்பட்டார். அதன் பிறகு வடக்கு மண்டல ஐஜியாக பதவியேற்றுக்கொண்ட சைலேந்திரபாபு, கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபியாகவும் பதவி வகித்துள்ளார். அதன்பிறகு சிறைத்துறை தலைவராக இருந்தபோது கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார். தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை டிஜிபியாக இருந்த அவர், ரயில்வே காவல்துறை டிஜிபியாக பதவி வகித்தார். குடியரசுத் தலைவர் பதக்கம், உயிர்காப்பு நடவடிக்கைக்கான பிரதமரின் பதக்கம், வீரதீர செயல்களுக்கான முதல்வர் பதக்கம் உள்ளிட்டவற்றைப் பெற்றவர் சைலேந்திரபாபு.
இன்று பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர் செய்தியாளர்களைச் சந்திக்கையில், ''குற்றச் சம்பவங்களைத் தடுக்க முன்னுரிமை வழங்கப்படும். தமிழக காவல்துறையின் தலைமைப் பொறுப்பை வகிப்பது அரிய சந்தர்ப்பம். மக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும்'' என்றார்.