உலகம் முழுவதும் கரோனா தொற்று மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்திய அளவிலும் தமிழகத்திலும் அதன் தாக்கம் தொடர்ந்து வருகிறது. குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரையும் வயது பேதமின்றி வைரஸ் தொற்று தாக்கி வருகிறது. இதைத் தொடர்ந்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்தும் பேராயுதமாக தடுப்பூசிகள் இருந்து வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷில்ட் ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகிறது.
முதலில் முன்கள பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் என போடப்பட்ட தடுப்பூசி, தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசிகள் போடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு தேவைக்கேற்ப தடுப்பூசிகள் அனுப்பப்படுவதில்லை. இருப்பினும் குறைவான அளவு வரும் தடுப்பூசிகளையும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரித்து அனுப்புகிறது தமிழக சுகாதாரத் துறை. ஈரோடு மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கும், பொதுமக்கள் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் இதுவரை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. அதோடு, அதற்கான சில வழிமுறைகளையும் அரசு வெளியிட்டிருந்தன. அதனடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் பாலூட்டும் தாய்மார்கள் 40 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கோவாக்சின், கோவிஷில்ட் ஆகிய தடுப்பூசிகளில் ஏதோ ஒன்று செலுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ளலாம், எந்த பக்க விளைவும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.