விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதிகளில், கடந்த 27ஆம் தேதி, செஞ்சி சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து, மர்ம நபர்கள் பணம் மற்றும் காணிக்கைப் பொருட்களைத் திருடிச் சென்றனர். இதேபோல் பட்டணம் கிராமத்தில் உள்ள விநாயகர் ஆலயத்திலும் கொள்ளை அடித்துச் சென்றனர். மேலும் அதே பகுதியில் உள்ள அய்யனார் அப்பன் ஆலயத்திலும், வெள்ளிமேடுபேட்டை திரவுபதி அம்மன் ஆலயத்திலும் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே நாளில் ஒரே பகுதியில் அடுத்தடுத்து கோவில் உண்டியல்கள் கொள்ளை போயின. இதுகுறித்து ரோசனை காவல் நிலைய போலீசார் மற்றும் வெள்ளிமேடுபேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவந்தனர். அதோடு அருகில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து அதன்மூலம் கொள்ளையர்களைத் தேடிவந்தனர்.
இந்த நிலையில், நேற்று திண்டிவனம் சந்தமேடு பகுதியில் ரோசனை சப்-இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் கொண்டுசென்று விசாரணை செய்தனர். அவர்களின் விசாரணையில், திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஆகிய இருவரும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும், நான்கு கோவில்களில் அடுத்தடுத்து உண்டியலை உடைத்து, அதில் இருந்த நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதை ஒப்புக் கொண்டுள்ளனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.