Skip to main content

“பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடைசெய்ய தொடர்ந்து போராடுவேன்” -ராஜேஸ்வரி பிரியா திட்டவட்டம்!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

BIG BOSS have to be ban


பிக் பாஸ் -4 ஆவது சீஸன் தொடங்கும் நிலையில், அதனைக் கண்டித்து அந்த நிகழ்ச்சியைத் தடை செய்யவேண்டும் என அனைத்து மக்கள் கட்சி சார்பாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா சென்னை காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் கொடுத்துள்ளார்.

 

அந்தக் கடிதத்தில், "ஆபாசத்தை மையமாகக் கொண்டு, கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டும் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 

இந்த நிகழ்ச்சி பல்வேறுவிதமான சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா என்ற நடிகை தற்கொலை முயற்சி எடுத்தார். அதற்கு நாங்கள் காவல் துறையில் புகார் அளித்தோம். ஆனால், எந்தவித விசாரணையும் காவல்துறையால் மேற்கொள்ளப்படவில்லை.

 

ஒரே வீட்டிற்குள் ஆண்கள் பெண்கள் சேர்ந்து தங்குவதும், கழிப்பறை வரை கேமரா வைப்பதும், அரைகுறை ஆடைகள் அணிந்து உலா வருவதும், காதல் உறவுகளை வீட்டிற்குள் இருந்தே வளர்ப்பது என்பன போன்ற தவறான பல கலாச்சார அத்துமீறல்கள் இந்த நிகழ்ச்சியில் பொருத்தப்பட்டுள்ளது. இது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தவறான எண்ண ஓட்டத்தை பதிய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகளும் ஒரு விதத் தூண்டுதலாக அமைகிறது. 

 

பொதுவாகவே ரியாலிட்டி ஷோ என்பது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறக்கூடிய ஒன்று. அப்படி இருக்கையில், இளைய சமூகத்தினரை பாதிப்படைய செய்யக்கூடிய ஆபாச நிகழ்ச்சியாக பிக் பாஸ் உள்ளதனால், இந்த நிகழ்ச்சி முற்றிலமாக தடை செய்யப்பட வேண்டும். 'சிகரெட் சோன்' என்ற ஒரு இடம் அமைக்கப்பட்டு அங்கே அவர்கள் புகைப்பிடிக்கச் செல்லலாம் என்றெல்லாம் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்படுகிறது. புகைப்பிடிக்கும் பழக்கத்தினை இளைஞர்கள் மத்தியில் அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பாக இது உள்ளது. 

 

Ad

 

சிறிய குழந்தைகள் முதல் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க தொடங்கிவிட்டார்கள். கூடதலாகக் கரோனா காலகட்டத்தில், 16 பேர் சேர்ந்து ஓர் இடத்தில் தங்கும் நிகழ்ச்சி தேவையில்லாத ஒன்றாகும். இது மக்கள் இடத்தில் தவறான முன் உதாரணமாக அமையும்.

 

எனவே, இந்த நிகழ்ச்சியைத் தடை செய்ய காவல்துறை இயக்குநர் அவர்கள் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பாகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும், இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், "இந்நிகழச்சியைத் தடை செய்ய தொடர்ந்து போராடுவேன்" எனத் தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்