குவார்ட்டருக்கு பந்தயம் கட்டி, சரக்கு இரயிலில் தொங்கி உயிரை விட்டவர்
சேலம் நகரிலுள்ள செவ்வாய்ப்பேட்டை, மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் வெங்கடேஷ் (வயது-33). இவர், தனது நண்பர்களுடன், நேற்று காலை 11 மணிக்கு கந்தம்பட்டி புறவழிச் சாலையில் உள்ள இரயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள காட்டுப்பகுதியில் மது அருந்தியுள்ளார்.
அப்போது, நண்பர்களுக்குள் ஒரு போட்டி வைத்தனர். கந்தம்பட்டி பைபாஸில் இருந்து, செவ்வாய்ப்பேட்டை கூட்ஸ் ஷெட்டுக்கு வந்து கொண்டிருந்த ஒரு சரக்கு இரயிலில் ஏறி, அங்கிருந்து பெட்டியில் தொங்கிய படி செவ்வாய் பேட்டை மார்க்கெட் வரையில் போய்விட்டு வந்தால் ஒரு குவார்ட்டர் வழங்கப்படும் என பந்தயம் கட்டியுள்ளனர்.
இதையடுத்து, அப்போது சேலம் ஜங்சனில் இருந்து செவ்வாய் பேட்டைக்கு வந்த ஒரு சரக்கு இரயிலில், பக்கவாட்டு கம்பியை பிடித்து ஏறிய வெங்கடேஷ், அங்கிருந்து தொங்கியபடியே சரக்கு இரயிலில் வந்துள்ளார்.
மேம்பாலத்தில் இருந்து இரண்டு பர்லாங் தொலைவுக்கு இரயிலில் தொங்கியபடியே வந்தவர், கையை மாற்றி மாற்றி இரயில் பெட்டியில் இருந்த கம்பியை பிடித்துக்கொண்டுவந்தவர், ஒரு கட்டத்தில் கை தடுமாறி கீழே விழுந்ததில், அடுத்து வந்த இரயில் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
இதைப்பார்த்த அவருடன் மது அருந்தியவர்கள் மற்றும் பந்தயம் கட்டிய நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சேலம் ஜங்ஷன் இரயில்வே போலீசார், வெங்கடேஷின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
சிவசுப்பிரமணியம்