சேலம் மாவட்டம், ஒமலூர் வட்டம், தொளசம்பட்டி பேரறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலத்திட்டப்பணி மாணவர்களுக்கு தொன்மையைப் பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளி வளாகத்தில் தொல்லியல் கண்காட்சி தலைமை ஆசிரியர் சீனிவாசன், நாட்டு நலத்திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர்கள் ஸ்ரீதர் மற்றும் நாகராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியை மாதநாயக்கன் பட்டி அரசுப்பள்ளி ஆசிரியர்களான விஜயகுமார், அன்பரசி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த தொல்லியல் கண்காட்சியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல் உயிர் படிமங்கள், கிபி 1 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை நெசவுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட தக்களிகள், வட்ட சில்லுகள், செந்நிற சுடுமண் ஓடுகள், பெருங்கற்கால கற்கருவிகள், விளையாட பயன்படுத்தப்பட்ட கல் உருளைகள், சுடுமண் சிற்ப ஓடுகள் வைக்கப்பட்டிருந்தது.
மேலும், தாரமங்கலம் பகுதியை ஆண்ட கெட்டி முதலி வம்சாவழியினர் வெளியிட்ட ஒரு பகுதியில் 'மீன்' சின்னமும் மறுபுறம் 'நா'என்று பொறிக்கப்பட்ட 3.6 கிராம் எடை கொண்ட செப்பு காசுகள் காட்சிப்படுத்தப்பட்டன. அதன் பிறகு இம்மாணவர்களை தாரமங்கலத்தில் உள்ள கட்டிடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும், கல்வெட்டுக்கும் புகழ் பெற்ற கைலாசநாதர் கோவிலுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டு கோவிலின் தல வரலாறும், இப்பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த சிற்றரசர்களான கெட்டி முதலிகளின் வரலாறும், அவர்கள் 17 ஆம் நூற்றாண்டில் வெளியிட்ட தமிழ் செப்பு காசுகளும் , கோவில் வளாகத்தில் உள்ள கல்வெட்டுகள் , சிற்பங்களையும் , கட்டிடக் கலையின் அமைப்பு பற்றியும் , கோவில் வளாகத்தில் உள்ள அரிகண்ட சிற்ப நடுகல் , அந்நடுகல் உருவான வரலாறு , கோவில் கட்டிடக்கலையின் சிறப்பான ஆண்டுதோறும் மாசி மாதம் 9, 10, 11 தேதிகளில் அந்தி சாயும் நேரத்தில் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது படும் நிகழ்வானது உலகப் பெற்றது.
இந்நிகழ்வினை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவது மிகவும் சிறப்பானது என்று மாணவர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது. ஒரு நாட்டின் பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம் இவற்றை அறிந்து கொள்ள உதவுவது கல்வெட்டுகள், செப்பேடுகள், கோவில் கட்டிடக் கலை, சிற்பக் கலை, நாணயங்கள் மற்றும் ஓலைச் சுவடிகள், நடுகற்கள் ஆகும். இவைகள் எல்லாம் நாட்டின் தேசிய சொத்து, இவையெல்லாம் வரலாற்றைப் பிரதிபலிக்கும் காலக் கண்ணாடிகள் ஆகும் , இவற்றை போற்றி பாதுகாப்பது நம் இளைய தலைமுறையான மாணவர்களின் கையில் தான் உள்ளது என்று நல்லாசிரியர் ஏ.அன்பரசி மற்றும் விஜயகுமார் ஆகியோர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.