சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன் மாணவர் ஒருவரை ஆசிரியர் வகுப்பறையில் தாக்கும் வீடியோ காட்சி வைரலாகியது. இதனைத் தொடர்ந்து சம்பந்தபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், அப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில், கடலூர் மாவட்ட காவல்துறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன், உதவி ஆய்வாளர் லூயிஸ்ராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் கலந்துகொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் தனித்தனியாக பள்ளியில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். தற்போது உள்ள சட்டமுறைகள் என்ன என்பது குறித்து விளக்கி பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
மேலும், பள்ளிக்குள் மாணவர்கள் செல்ஃபோன் எடுத்துவருவதை தடுக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் பல இடங்களில் விழிப்புணர்வு பேனர் வைக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களை மாதம் ஒருமுறை பள்ளிக்கு அழைத்து, மாணவர்களின் நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூற வேண்டும். மாணவர்களிடம் ஆசிரியர்கள் உளவியல் ரீதியாக அவர்களின் குறைகளை எடுத்துக்கூறி திருத்த வேண்டும் என்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் குகநாதன் உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர் - ஆசிரியர்கழக தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர்கள் பாலமுருகன், கலியமூர்த்தி சகஜானந்தா மணிமண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.