ஆருத்ரா மோசடி தொடர்பாக நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் இன்று விசாரணை நடைபெற இருக்கிறது.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா நிறுவனம் முதலீடு செய்த ஒரு லட்சம் முதலீட்டாளர்களை ஏமாற்றி 2,438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த மோசடியில் பாஜகவின் ஓபிசி பிரிவு துணைத் தலைவராக இருக்கும் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை கையில் எடுத்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஆர்.கே.சுரேஷுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால் ஆஜராகாத ஆர்.கே.சுரேஷ் திடீரென தலைமறைவானார்.
இந்நிலையில் வெளிநாட்டிலிருந்த ஆர்.கே.சுரேஷ் துபாயிலிருந்து நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். அவரிடம் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ஆருத்ரா கோல்டு மோசடி தொடர்பாக நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணை நடத்த இருக்கின்றனர். இந்த விசாரணையில் யார் யாருக்கெல்லாம் இந்த மோசடியில் தொடர்பு இருக்கிறது என்பது விசாரணைக்கு பின் வெளியே வரும் என காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.