நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முன்தினம் அறிவித்த நிலையில், அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தொடர்ந்து பாஜக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட அணியமாகி வருகிறது.
திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த கட்சியின் சார்பாக சூரியமூர்த்தி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் சூரியமூர்த்தி பேசிய பேச்சுகள் தொடர்பான வீடியோக்கள் வைரலானது. எதிர்க்கட்சியினர் வேட்பாளரின் பேச்சு குறித்து பல்வேறு விமர்சனங்களை சமூக வலைத்தளங்களின் வாயிலாக வைத்திருந்தனர். இந்நிலையில், நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட இருந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சூரியமூர்த்தி மாற்றப்பட்டு புதிய வேட்பாளராக மாதேஸ்வரன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.