அரியலூர் நகராட்சியில் போதிய உறுப்பினர்கள் வராததால் நகராட்சி நியமன குழு, வரி மேல் முறையீட்டுக் குழு மற்றும் ஒப்பந்தப்புள்ளி குழுக்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
அரியலூர் நகராட்சியில் இன்று 9:30 மணிக்கு நகராட்சி நியமனக் குழு, வரி மேல் முறையீட்டுக் குழு மற்றும் ஒப்பந்தப்புள்ளி குழுக்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தல் நடைபெறுவதாக அரியலூர் நகராட்சியின் ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலரான சித்ரா சோனியா அறிவித்திருந்தார். இதனையடுத்து நகராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் 8வது வார்டு ராஜேந்திரன், 9வது வார்டு மகாலட்சுமி, 10வது வார்டு இன்பவல்லி, 11வது வார்டு முகமது இஸ்மாயில், 13வது வார்டு வெங்கடாஜலபதி, ஆகிய 5 பேர் மட்டுமே வருகை தந்திருந்தனர்.
போதிய உறுப்பினர்கள் இல்லாததால் இன்று நடைபெற இருந்த நியமன குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா அறிவித்தார். கூட்டத்திற்கு 12வது வார்டு மதிமுக கவுன்சிலர் மலர்கொடி மனோகரன் மற்றும் 17வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஜீவா செந்தில் ஆகியோர் தாமதமாக வருகை தந்தனர். இதனையடுத்து கூட்டத்திற்கு வந்த கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.