அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஆயுதகளம் கிராமத்தைச் பிரவீன்குமார். இவர் அப்பகுதியில் ஒரு வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்துவருகிறார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அதன் பிறகு வீட்டை விட்டு வெளியே சென்றவர் அன்று இரவு வீடு திரும்பவில்லை.
பிரவீன் குமார் வீட்டிற்கு வராததைக் கண்டு அவரது பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது, ஆயுதகளத்திலிருந்து மெயின் ரோட்டுக்கு வரும் வழியில் ஒரு பாழடைந்த கொட்டகை அருகே ரத்த கரை படிந்துகிடந்துள்ளது. அதைக்கண்டு சந்தேகமடைந்த ஊர்மக்கள், இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. தேவராஜ், அரியலூர் கூடுதல் டி.எஸ்.பி. திருமேனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர். அப்போது அந்த கொட்டகை பக்கத்திலிருந்து அருகிலுள்ள பாழடைந்து மூடப்பட்டிருந்த கழிவறை வரை ரத்தக்கரை பரவியிருந்தது கண்டு சந்தேகமடைந்த காவல்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் உடனடியாக ஆட்களை கொண்டு வந்து அந்த மூடப்பட்டிருந்த கழிவறையை உடைத்து அதன் தொட்டியைத் தோண்டி பார்த்தனர்.
அதனுள்ளே பிரவீன்குமார், பல்வேறு வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கழிவறைத் தொட்டிக்குள் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அரியலூர் மாவட்ட எஸ்.பி. சீனிவாசன், நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளார். இதுகுறித்து பிரவீன் குமாரின் தந்தை செல்லதுரை, ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரவீன்குமார் கொலை செய்யப்பட்டுள்ள இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகை எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. ஆனாலும், குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை. போலீசார் குற்றவாளிகளை தேடி வருவதாக கூறுகின்றனர். 23 வயது இளைஞன் பிரவீன் குமார் படுகொலை செய்யப்பட்டு பயனற்ற கழிவறை தொட்டியின் உள்ளே வைத்து புதைத்த கொடூர செயல் ஜெயங்கொண்டம் பகுதி மக்களை பதைபதைக்கச் செய்துள்ளது.
பிரவீன்குமார் ஏன் கொலை செய்யப்பட்டார், எதற்காக கொலை செய்யப்பட்டார், அவரை கொலை செய்தவர்கள் யார், கொலைக்கான காரணம் என்ன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் கொலையாளிகளை பிடிப்பதற்காக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.