திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளகுட்டை, நிம்மியம்பட்டு, ஜாப்ராபாத் உள்ளிட்ட அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் இன்று கலைஞர் கனவு இல்லத்தின் திட்டம் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. வெள்ளகுட்டை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா தலைமையில் நடைபெற்றது.இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் கலந்து கொண்டு கலைஞர் கனவு இல்லத்தின் திட்டங்கள் குறித்து கிராம மக்கள் மத்தியில் விளக்கமளித்தனர்.
பின்னர் அங்கு கூட்டத்திற்கு வந்திருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் பேசிய போது, இந்த கிராமத்தில் தலைவர் வார்டு உறுப்பினர் என அனைவரும் இருந்தும் இந்த கிராமத்தில் வளர்ச்சி இல்லை, கிராம சபா கூட்டத்திற்கு கிராம மக்களுக்கு அழைப்பு விடுக்கும் துண்டு பிரசுரங்கள் கொடுப்பதில்லை , பெயரளவுக்கு 4 துண்டு பிரசுரங்கள் மட்டும் அச்சடிக்கப்பட்டு வருகிறது என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ 10 லட்சம் கொடுக்கிறீர்கள் அவர்கள் குடும்ப நலனை மட்டும் பார்க்கும் நீங்கள் வசதி இல்லாத ஏழை எளிய மக்களுக்கும் கிராம மக்களுக்கு நியாய விலைக் கடைகளில் பருப்பு பாமாயில் ஆகியவை சரியாக வழங்கப்படுவதில்லை. கிராம மக்களுக்கு எந்த உதவிகள் செய்யாமல் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் விடியல் ஆட்சி என்று கூறி மக்களை பட்டினி போட்டு சாவடிக்கிறீர்களா? என்று பல்வேறு கேள்விகளை முன் வைத்து ஊராட்சி நிர்வாகத்திடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதற்கு அதற்குப் பதிலளித்த ஊராட்சி நிர்வாகத்தினர் அடுத்த முறை அதிகமாக துண்டு பிரசுரங்கள் அச்சடித்து வழங்குகிறோம் என்று கூறினார். அதற்கு அவர் உங்கள் ஆட்சியே முடியும் என்று நக்கலாக பதில் அளித்தார். பின்னர் அவசர அவசரமாக கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு கிராம சபை கூட்டம் முடிக்கப்பட்டது. நான் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் வழங்காமல் ஏன் அவசர அவசரமாக கூட்டத்தை முடிக்கிறீர்களா என்று கூறி மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.