தென்னிந்தியாவில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிமாநில, வெளிமாவட்ட பக்தர்கள் வருகிறார்கள். வாரஇறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், அமாவாசை போன்ற நாட்களில் பல்லாயிரம் பக்தர்களும், பௌர்ணமியன்று லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வந்து அண்ணாமலையாரை வணங்கிவிட்டு கிரிவலம் வருகிறார்கள்.
கோவிலுக்குள் கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 3 முதல் 4 மணி நேரமாகிவிடுகிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் இருந்து வரும் வசதியான பக்தர்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். இதற்காக கோவிலை சுற்றி பலப்பல புரோக்கர்கள் உள்ளார்கள், அவர்களை அணுகுகிறார்கள். நூற்றுக்கும் குறையாமல் உள்ள இந்த புரோக்கர்கள், அர்ச்சகர்கள் மற்றும் கோவில் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் சிலருடன் தொடர்பு வைத்துக்கொண்டு விரைவு தரிசனம் வேண்டுபவர்களை தனியே அழைத்து செல்கின்றனர். இதற்காக பக்தர்களின் எண்ணிக்கையை பொருத்து 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம், அதற்கு மேலும் பணம் வாங்குகிறார்கள்.
அண்ணாமலையார் சன்னதி கருவறை அருகே அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது, கோவில் அறங்காவலர்கள் பணம் வாங்கிக்கொண்டு சிலர் மூலமாக அதனையும் செய்கின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து வந்த ஒரு தொழிலதிபர் குடும்பம் கோவிலுக்குள் விரைந்து தரிசனம் செய்யவைக்க 20 ஆயிரம் தருவதாக கூறியுள்ளது. அவர்களை சுவாமி தரிசனம் அழைத்து செல்வதில் கோவில் புரோக்கர்களான மண்டி சீனு, ரியல் எஸ்டேட் மற்றும் கோவில் புரோக்கர் குமார் இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. கோவிலுக்குள் வைகுந்த வாயில் முன்பு கோவில் என்றும் பாராமல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்பு ஆபாசமான வார்த்தைகளால் அசிங்கமாக இருவரும் மாறிமாறி திட்டிக்கொண்டனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளுர் மக்களை மட்டுமல்லாமல் வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வீடியோ வெளியாகி பரபரப்பான நிலையில் கோவிலுக்குள் அநாகரிகமாக நடந்துகொண்டு, பக்தர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்திய இருவர் மீதும் கோவில் நிர்வாகம் காவல்நிலையத்திற்கு புகார் எதுவும் தரவில்லை. இதுகுறித்து கோவில் ஊழியர்கள் சிலரிடம் நாம் விசாரித்தபோது, கோவில் அறங்காவலர் குழு தலைவர், அதிகாரிகளே தவறுக்கு துணைபோகிறார்கள். கடந்த மாசி மாதம் திறக்கப்பட்ட கோவில் உண்டியல் வருமானம் மட்டும் ரூ.2.7 கோடி. இவ்வளவு வருமானம் வந்துள்ளது, அவ்வளவு வருமானம் தரும் பக்தர்களுக்கு கோவிலுக்குள் என்ன அடிப்படை வசதிகள் செய்து தந்துள்ளார்கள் என்றால் எதுவுமில்லை. கோவிலுக்குள் பக்தர்கள் வரும் வரிசைக்கு சில்வர் கேட் அமைக்கப்போகிறோம், அதற்காக கோவிலுக்கு வரும் வசதியானவர்களிடம் நன்கொடை வாங்கித்தாருங்கள் என சிவாச்சாரியார்களை அழைத்து அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், இணைஆணையர் ஜோதி ரகசிய கூட்டம் போட்டு சொல்லியுள்ளார்கள்.
கோவில் நிதியிலேயே அந்த வேலைகளை செய்யலாம், அதற்கு பதில் நன்கொடை வாங்கித்தாருங்கள் எனக்கேட்கிறார்கள், வெளிப்படையாக கேட்டாலே பலரும் நன்கொடை தரதயாராக இருக்கிறார்கள். அதைமீறி சிவாச்சாரியார்களை ஏஜென்ட்களாக்கியுள்ளார்கள். இப்படி மறைமுகமாக நன்கொடை வாங்குவதன் பின்னால் நன்கொடை கொள்ளை திட்டம் உள்ளதோ என சந்தேகப்பட வேண்டியுள்ளது” என்கிறார்கள்.
எதையும் வெளிப்படையாக செய்யாமல் மறைமுகமாக செய்யவேண்டியதன் அவசியம் அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்துக்கு எதனால் வந்தது? கோவில் புரோக்கர்களுக்கு கோவில் நிர்வாகம், அறங்காவலர்கள் துணை போகவேண்டியதன் அவசியம் என்ன? என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.