Skip to main content

“நான் சொல்றது உங்களுக்கே புரியலன்னா... அவங்களுக்கு எப்படி புரியும்” - கட்சி நிர்வாகிகளிடம் அன்புமணி வருத்தம்

Published on 09/04/2023 | Edited on 09/04/2023

 

anbumani talk about coal mine in delta

 

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கக் கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் அண்ணாசாலையில் போராட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி, “தமிழ்நாட்டிலேயே நிலப்பரப்பில் 2வது பெரிய மாவட்டமாக திருவண்ணாமலை உள்ளது. இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் இருக்கும் மக்கள் தொகையை விட திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் மக்கள் தொகை அதிகம். இந்த மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளும், 2 நாடாளுமன்றத் தொகுதிகளும் உள்ளன. அதனால் 4 சட்டமன்றத் தொகுதிகள் வீதம் 2 மாவட்டமாகப் பிரிக்க வேண்டும். இதனை வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் முதல்வர் அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து நாங்கள் இதனை வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம்” என்றார். 

 

இதற்கு முன்னர் திருவண்ணாமலையை பிரிக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது பாமக தொண்டர்களிடையே அன்புமணி பேசியபோது, “நான்தான் முதலில் டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டேன். அப்போது யாரும் கேட்கவில்லை. அதன்பிறகு தஞ்சையில் எடுக்குறாங்க என்று சொன்னவுடன் எல்லாருக்கும் கோவம் வந்துவிட்டது. அந்த நேரத்தில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு கடிதத்தை கொடுத்து ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொள்கிறார். இந்த மாதிரி நேரத்தில்தான் மத்திய அமைச்சர் டெல்டா பகுதியில் அமையவிருக்கும் நிலக்கரி சுரங்கம் இருக்கும் பெயர்களை ஏல பட்டியலில் இருந்து எடுத்து விடுவோம் என்று ட்வீட் செய்கிறார். இதில் என்ன வேடிக்கை என்றால் நிலக்கரி சுரங்கம் அறிவிப்பை ஏல பட்டியலில் இருந்துதான் எடுப்பார்கள். 

 

ஆனால் நாளைக்கு வேற யாராவது அந்த நிலக்கரி சுரங்கத்தை எடுத்து நடத்தலாம்; அவ்வளவுதான். இது யாருக்கும் தெரியாமல்... எல்லாரும் என்னால் தான் வெற்றி கிடைத்துவிட்டது என்று பதிவு போட்டுக்கிட்டு இருக்கிறார்கள். இதில் என்ன வெற்றி இருக்கிறது; முதலில் இதை சொன்னதே நான் தான். நானே வெற்றி என்று கூறவில்லை. இன்னும் ஏமாற்றம் என்றுதான் சொல்லிக்கொண்டு வருகிறேன். உங்களுக்கு என்ன வெற்றி? இன்னும் ஏல பட்டியலில் இருந்து டெல்டா பகுதியை எடுத்ததற்கான அரசாணை வரவில்லை; அதற்குள் வெற்றி. பாஜகவே இந்த அறிவிப்பை வெளியிடுவாங்களாம்... அதை எதிர்த்து அவங்க கட்சியை சேர்ந்த அண்ணாமலையே கடிதம் கொடுத்து திரும்ப சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வார்களாம்” என்று கடுமையாகச் சாடினார். 

 

இதற்கிடையில் பாஜக குறித்து அன்புமணி சீரியஸாக பேசிக்கொண்டிருக்கும் போது மேடையில் இருந்த பாமக நிர்வாகி கை தட்டினார். அதைப் பார்த்து ஆத்திரமைடைந்த அன்புமணி, “என்னங்க கை தட்டுறீங்க... உங்களுக்கே நான் சொல்றது புரியலன்னா அவங்களுக்கு எப்படி புரியும்” என்று சிரிச்சிக்கிட்டே கண்டித்து விட்டு தனது உரையைத் தொடர்ந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்