சென்னையில் நகைக்கடையின் ஷட்டரை வெல்டிங் மிஷினால் வெட்டி கடையில் இருந்த 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் மதிப்புள்ள வைரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வசித்து வருபவர் நகைக்கடை அதிபர் ஸ்ரீதர்(36). இரண்டு மாடிகள் கொண்ட இவரது வீட்டின் இரண்டாவது தளத்தில் ஸ்ரீதர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். முதல் தளத்தில் ஜே.எல் என்ற பெயரில் கடந்த 8 வருடங்களாக நகைக்கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில், நேற்று இரவு நகைக்கடையில் வியாபாரம் முடிந்து ஊழியர்கள் கடையைப் பூட்டி சாவியை ஸ்ரீதரிடம் கொடுத்துச் சென்றனர். இன்று காலை சுமார் 9 மணியளவில் ஸ்ரீதர் கடையைத் திறப்பதற்காக வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க ஷட்டர் வெல்டிங் மிஷினால் வெட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உள்ளே சென்று பார்த்தபோது, கடையினுள் இருந்த லாக்கர் ரூம் கதவை வெல்டிங் மிஷினால் கட் செய்து உள்ளே இருந்த 9 கிலோ தங்க நகைகள், 20 லட்சம் மதிப்புள்ள வைரங்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
மேலும், கடையில் இருந்த சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. உடனே ஸ்ரீதர் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''அலாரம் வெளியில் கேட்க வேண்டிய அளவிற்கு இருக்க வேண்டும். சர்ப்ரைஸான இடங்களில் தொட்டால் கண்டிப்பாக அடிக்கும் அலாரத்தை வெளியில் தெரியும் அளவிற்கு நகைக்கடைகளில் பிக்ஸ் பண்ண வேண்டும் என பலமுறை வலியுறுத்திச் சொல்லி உள்ளோம். உங்கள் மூலமாகவே பல தகவல்களை கொடுத்திருக்கிறோம். மேற்கொண்டு நடக்கக்கூடிய சம்பவங்களில் சிரத்தை எடுத்து மீண்டும் ஒரு மீட்டிங் போட்டு இதை சொல்வோம். இந்த பகுதி எப்பொழுதுமே வாகனத் தணிக்கை நடக்கக்கூடிய இடம். ரெகுலராக போலீஸ் செல்கின்ற இடம் என்று அவர்களே சொல்கிறார்கள். எந்த கேப்பில் இந்த திருட்டு நடந்தது என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் கண்டுபிடித்து விடுவோம்'' என்றார்.