கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய்யின் உரையில் 'தங்கள் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என குறிப்பிட்டு பேசியிருந்தார். அதேபோல் ஊழல் கபடதாரிகளையும், பிளவுவாத சக்திகளாக செயல்படுபவர்களையும் தங்களுடைய எதிரிகள் என விஜய் குறிப்பிட்டு பேசி இருந்தார்.
விஜய்யின் பேச்சு குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் விஜய் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு திருமாவளவன் பதிலளித்து பேசுகையில், ''விஜய்யிடம் ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் பல்வேறு யூகங்களுக்கு விடை சொல்வதிலேயே குறியாக இருந்தார். தனக்கு எதிரான விமர்சனங்களை பற்றி, அல்லது இனிமேல் செய்யப் போகிற விமர்சனங்களை பற்றி விளக்கம் சொல்வதிலேயே அதிகநேரத்தை எடுத்துக் கொண்டார். அடுத்தது நண்பர்கள் யார் யார் என்பதை அடையாளம் காட்டுவதை விட தன்னுடைய எதிரிகள் யார் என்று அடையாளம் காட்டுவதிலேயே ஆர்வம் காட்டினார்.
யார் யார் நமக்கு நட்பு சக்திகள்; யார் யாருடன் நம்மால் இணைந்து செயல்பட முடியும் என்று தமது தொண்டர்களுக்கு அடையாளம் காட்டுவதற்கு பதிலாக தங்களுடைய எதிரிகள் யார் என்று வரிசைப்படுத்துகின்ற பொழுது பிளவுவாத சக்திகள் முதலாவது எதிரி என்றும், ஊழல் சக்திகள் இரண்டாவது எதிரி என்றும் குறிப்பிட்டார். பிளவுவாத சக்திகள் என்று சொல்கின்ற பொழுது வெளிப்படையாக சொல்லவில்லை. குறிப்பிட்டு இந்த கட்சிதான், இந்த அமைப்புதான் என்று அவர் அடையாளப்படுத்தவில்லை.
பெரும்பான்மை சிறுபான்மை பேசுகின்ற அரசியலில் தனக்கு உடன்பாடு இல்லை. இத்தகைய பிளவு சக்திகளை எதிர்க்கிறோம் என்று மேம்போக்காக சொல்கிறார். அதிலேயே ஒரு முரண்பாடும் தெரிகிறது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொல்கின்ற பொழுது சமத்துவ அரசியலை முன்மொழிகிறார் என்று மகிழ்ச்சி அடைகின்ற வேளையில் பெரும்பான்மை சிறுபான்மை என்று பேசும் அரசியலில் உடன்பாடு இல்லை என்று சொல்லும் பொழுது பெரும்பான்மை வாதத்தை பேசுபவர்கள் யார் என்பதை அடையாளப்படுத்த வேண்டும் என்ற தேவை உள்ளது. அவர்கள் தான் நம்முடைய எதிரிகள் என்று வெளிப்படையாக சொல்ல வேண்டிய தேவையும் இருக்கிறது. பெரும்பான்மை வாதத்திலும் உடன்பாடு இல்லை சிறுபான்மை அரசியலிலும் உடன்பாடும் இல்லை என்றால் பெரும்பான்மை வாதத்திற்கு துணை போகும் செயலாக அது அமைந்து விடும்.
இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பான்மை வாதம் பேசுகின்ற ஒரே கட்சி பாஜக. அதற்கு துணை நிற்கின்ற சங்பரிவார் இயக்கங்கள். அதனால் சிறுபான்மை சமூகத்தினர் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும், இதர மத வழி சிறுபான்மையினரும் எந்த அளவிற்கு அச்சத்தோடு பீதியோடு இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இந்த உலகறிந்த உண்மை. ஆனால் எனக்கு பெரும்பான்மை சிறுபான்மை என்ற அரசியலிலேயே நம்பிக்கை இல்லை அதை எதிர்க்கிறோம் என்று மேம்போக்காக சொல்லிவிட்டு கடந்து செல்கிறார். அப்படியென்றால் இஸ்லாமியரின் பாதுகாப்பு; கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு; சமணர், பௌத்தர் போன்ற சிறுபான்மை மத மக்களின் பாதுகாப்பு குறித்து அவருக்கு என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று இன்னும் முதல் அடியே எடுத்து வைக்காத தவெக கூற முடியாது. அதிமுக, பாஜகவை விஜய் கண்டுகொள்ளவில்லை அவர்கள் நண்பர்களா என்பதை விஜய் விளக்க வேண்டும். விஜய் பேச்சை நம்பி எந்தெந்த கட்சிகள் வருவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. கூட்டணிக் கட்சியினருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறி திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த விஜய் முயற்சிக்கிறார். விஜய்யின் பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது. திமுக எதிர்ப்பு என்பது தமிழகத்தில் நீண்ட காலமாக ஒலிக்கிறது. அது மக்களிடையே எடுபடாது. விஜய்யின் உரையில் அதிகளவு திமுக எதிர்ப்பு நெடி வீசுகிறது. பாஜக எதிர்ப்பில் உறுதியாக இல்லை என்பது விஜயின் பேச்சில் தெரிகிறது''என்றார்.