கடலில் கலந்த கச்சா எண்ணெய் கசிவினால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. கடலுக்கு அடியில் அமைந்துள்ள சிபிசிஎல் பைப் லைனை முற்றிலும் அகற்ற வேண்டும்" என நாகூரில் நடந்த ஏழு கிராம மீனவர்கள் கூட்டத்தில் அதிரடியாக முடிவு செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்தின் பைப் லைன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென உடைந்து, நாகூர் முதல் வேளாங்கண்ணி வரையிலான கடல் நீர் முழுவதும் பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் படர்ந்துள்ளது. கடலில் படர்ந்துள்ள கச்சா எண்ணெய்யின் வீரியத்தால் கடலோரத்தில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்களுக்கு கண் எரிச்சல், சுவாசக் கோளாறு ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நேற்று காலை மீனவர்கள் வந்து கடற்கரையில் பார்த்த பொழுது அங்கு பைப் லைனில் இருந்து மீண்டும் கச்சா எண்ணெய் கசிந்து கொண்டிருந்தது. இதனால் ஆவேசமடைந்த நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் பைப் லைனை முற்றிலும் அகற்ற வேண்டும் என இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர். மீனவர்களின் போராட்டம் காரணமாக அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வேலை நிறுத்த போராட்டமானது மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
அதேநேரம் உடைப்பு ஏற்பட்ட குழாயை அடைக்கும் பணி நிறைவு பெற்றதாக சிபிசிஎல் நிறுவனம் தெரிவித்திருந்தது. குழாயின் பணி காலம் இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளதால் அதன் பிறகே அதனை முழுமையாக அகற்ற முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பட்டினச்சேரி மீனவர் கிராமத்தில் சிபிசிஎல் கச்சா நிறுவன குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளதால் பழுதை சரி செய்யும் பணியில் அந்நிறுவன ஊழியர்கள் மீண்டும் ஈடுபட்டுள்ளனர். சீரமைப்பிற்கு பிறகும் கச்சா எண்ணெய் கசிவு அங்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கடலுக்கு அடியில் செல்லும் குழாய்களை அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் மற்றும் மீன்வர்களின் கோரிக்கையாக உள்ளது.