கடந்த 70 வருடங்களாக பல்வேறு பிரச்சனைகளால் பிரிந்திருந்த மக்கள் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய நாட்டை ஒரே நாடாகவே பார்க்க தொடங்கியிருக்கின்றனர் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்-ன் நிறுவன நாள் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இந்தநிகழ்வில் பேசிய அவர், ''இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து நூறாவது ஆண்டான 2047 ஆம் ஆண்டு உலகிலேயே பலம் வாய்ந்த நாடாக இந்தியா மாறும். இதுதான் நமது இலக்கு. இந்த இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். இதற்கு ஒவ்வொரு குடிமகனும் ஒருங்கிணைந்து, ஒத்துழைப்பு தர வேண்டும். ஒவ்வொரு அமைப்பின் ஒத்துழைப்பும் இதில் அவசியம். இந்த இலக்கை நோக்கிதான் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்கின்றோம். ஐந்தாண்டுத் திட்டங்களால் நாட்டின் ஒருபகுதி பயனடையும் போது மற்றொரு பகுதி பயனடைய முடியாமல் போகும் நிலை இருந்தது. அந்த சூழல் மாறியுள்ளது. 2014ஆம் ஆண்டு வரை நாட்டில் 400 நிறுவனங்கள் இருந்த நிலையில் தற்போது 70,000 நிறுவனங்கள் உருவெடுத்துள்ளது' எனக் கூறினார்.