சென்னையில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்த அதிமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இரண்டு வாலிபர்கள் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சென்னை செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் திலகர் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (53). பாடியநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான இவர், அதிமுகவில் திருவள்ளூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை பார்த்திபன், வழக்கம்போல் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்பகுதியில் உள்ள இந்திரா காந்தி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து செங்குன்றம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பார்த்திபனை கொலை செய்ததாக சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த முருகேசன் (33), அரக்கோணத்தைச் சேர்ந்த சங்கர் (32) ஆகிய இருவர் சேலம் 3வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து இருவரையும் சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். விரைவில் அவர்கள் இருவரையும் செங்குன்றம் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.