Skip to main content

அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் தம்பி கைது

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

admk ex mla brother bullet raja arrested
புல்லட் ராஜா

 

மண்ணச்சநல்லூர் அருகே தத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி முருகன். இவர் அதிமுக கட்சியின் மண்ணச்சநல்லூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆவார். இவரது தம்பி புல்லட் ராஜா வயது 41. பால் வியாபாரம் செய்யும் புல்லட் ராஜா இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி அதே பகுதியில் உள்ள கன்னியாகுடியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சதீஷ்குமார் என்பவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் புல்லட் ராஜா உள்ளிட்ட ஆறு பேரை மண்ணச்சநல்லூர் போலீசார் கைது செய்து புல்லட் ராஜாவை  குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

 

திருச்சி மத்திய சிறையில் இருக்கும் புல்லட் ராஜாவை பார்க்க அவரது மனைவி கிருஷ்ணவேணி அடிக்கடி ஆட்டோவில் சென்று வந்துள்ளார். ஆட்டோவில் செல்லும்போது மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சின்னராசுக்கும் புல்லட் ராஜாவின் மனைவி கிருஷ்ணவேணிக்கும்(37) காதல் ஏற்பட்டுள்ளது.

 

admk ex mla brother bullet raja arrested
சின்ன ராசு

 

அண்மையில் ஜாமீனில் வெளிவந்த புல்லட் ராஜா, ஆட்டோ ஓட்டுநர் சின்னராசுவுக்கும் தனது மனைவி கிருஷ்ணவேணிக்குமான திருமணத்தை மீறிய உறவைக் கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரும் உறவைத் தொடர்ந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை இரவு சின்னராசு தனது ஆட்டோவில் பெண் தோழி கிருஷ்ணவேணியை ஏற்றிக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு  சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.  

 

ஆட்டோவை கோயில் வளாகமான முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய வந்தபோது அவர்களைப் பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், பெண் தோழியின் கண் முன்னே ஆட்டோ ஓட்டுநர் சின்னராசுவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சின்னராசுவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பந்தப்பட்ட எம்எல்ஏவின் தம்பி புல்லட் ராஜா தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அவரை சமயபுரம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்