நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து (57) நேற்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்திருந்த நிலையில், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பு மக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்பு நேற்று மாலை சென்னையிலிருந்து அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு மாரிமுத்துவின் மறைவு குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், 'நடிகர் மாரிமுத்துவுக்கு திடீரென இப்படியாகும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. நான் மதுரையில இருக்கேன். நேத்துதான் என்னுடைய தம்பிக்கு 13 வது நாள். அதற்காக இங்கு வந்தபோது தான் எனக்கு இந்த தகவல் தெரிய வந்தது. நான் கூட சீரியலில் தான் அப்படி ஏதும் கிளைமாக்ஸ் பண்ணி இருக்கிறார் என்று நினைத்தேன். முதலில் நம்பவில்லை. கடைசியில் உண்மையிலேயே அவர் டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பில் இறந்து விட்டார் என தெரிய வந்தது. ரொம்ப கஷ்டமா போச்சு. ஏன் இப்படி எல்லாம் நடக்குது ஒண்ணுமே புரியல. ராஜ்கிரண் ஆபீஸ்ல நானும் அவரும் நெருக்கமா பழகினோம். அவருடைய படம் கண்ணும் கண்ணும். அதில், அடிச்சுக் கூட கேப்பாங்க அப்பையும் சொல்லாதீங்க என்ற காமெடி அவர்தான் உருவாக்கினார். அதேபோல் கிணத்த காணோம் என்கிற காமெடி அவர்தான் பண்ணினார். பெரிய நகைச்சுவை சிந்தனையாளர். அவர் ரொம்ப மனசு விட்டு சிரிப்பார். அவர் மனைவி பிள்ளைகளோடு குடும்பமாக பேட்டி கொடுத்திருந்தார். சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தார். திடீர்னு பார்த்தா இப்படி நடந்து விட்டது. பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது'' என்றார்.