கள்ளக்குறிச்சி கிருஷ்ணா நகரில் சிலர் ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் அவர்கள் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்கு கணினி மூலம் 'ஒன் எக்ஸ் பெட் ஆப்' என்ற சூதாட்ட பந்தயம் நடந்துவந்துள்ளது தெரியவந்துள்ளது.
போலீசாரின் தீவிர விசாரணையின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி அருகிலுள்ள செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 27 வயது மணிகண்டன், ஓமலூர் சாமி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர், மண்மலை கிருஷ்ணமூர்த்தி, சின்னசேலம் காந்திநகர் கோகுல்நாத், அருண்குமார், மணிகண்டன், சங்கராபுரம் மணிவேல், ஈஸாந்தை அரவிந்த், கரடிசித்தூர் பாலாஜி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் மணிகண்டன் ஆன்லைன் சூதாட்ட கேமின் தலைவனாக இருந்து செயல்பட்டுவந்துள்ளார். இவர்களிடம் சூதாட்டத்தில் ஈடுபட்டு ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.
இந்த சூதாட்டத்தின் மூலம் மணிகண்டன் மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் பணம் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி சம்பாதித்த பணத்தில் மணிகண்டன் பல்வேறு இடங்களில் வீட்டு மனைகளில் முதலீடு செய்திருப்பதும், தான் சம்பாதிக்கும் பணத்தில் மற்ற எட்டு பேருக்கும் அவ்வப்போது பணம் பங்கிட்டும் கொடுத்துள்ளார். இந்த 9 நபர்களிடமிருந்து 30 மொபைல் ஃபோன்கள், 400 சிம் கார்டுகள், ஒரு ராயல் என்ஃபீல்டு பைக், 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார், டிவி, ஒரு வைஃபை, கைரேகை பதிவு செய்யும் கருவி, கணினி பயன்படுத்தும் யுபிஎஸ், ஆறு மானிடர்கள், 9 சிபியு ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 9 நபர்களையும் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக் எச்சரித்துள்ளார். இதுபோன்று கள்ளக்குறிச்சி, சின்னசேலம், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளதாக இளைஞர்கள் தரப்பில் பரபரப்பாக பேசப்படுகிறது.