புதுச்சேரியில் 700 சதவீதம் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு -
கிரண்பேடி தகவல்!
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு 700 சதவீதம் அதிகரித்துள்ளது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு புதுவையில் தொடர்ந்து கூடுதலாகி வருகிறது. ஏற்கெனவே 2 பேர் உயிரிழந்த நிலையில் அரசு பொது மருத்துவமனை, ஜிப்மர், தனியார் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்பு ஆய்வுக் கூட்டத்தை ஆளுநர் மாளிகையில் கிரண்பேடி ஞாயிற்றுக்கிழமை மாலை கூட்டினார்.
ஆளுநரின் செயலாளர் தேவநீதிதாஸ், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மோகன்குமார், நகராட்சி ஆணையர்கள் ரமேஷ், கணேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதால் அதற்கு எசிகாத போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 700 சதவீதம் டெங்கு அதிகரித்துள்ளது.
டெங்கு பாதிப்பை தவிர்க்க மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். டெங்கு குறித்து சுகாதார துறை அதிகாரிகள் நகராட்சி மாவட்ட அதிகாரிகளுடன் டெங்கு ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. டெங்குவை கட்டுப்படுத்தவும் நோயை குணப்படுத்தவும் தேவையான அனைத்து மருந்துகளையும் கூடுதலாக வாங்க புதுச்சேரி நிதித்துறை செயலரிடம் அறிவுறுத்தியுள்ளேன் என்றார் கிரண்பேடி.
உடனிருந்த அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மோகன்குமார் கூறியதாவது: நிகழாண்டு மட்டும் 2000 பேர் டெங்கு அறிகுறி இருந்ததால் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றவர்கள் உயிரிழக்கவில்லை. டெங்கு பாதிப்புக்கு வெளியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் இரண்டு பேர் இறந்து உள்ளனர். மருத்துவமனையில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதை சமாளித்து வருவதாகவும் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ஆகஸ்ட் மாதம் 260 டெங்கு நோயாளிகளும் செப்டம்பர் மாதம் 360 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர் என்றார்.
ஆளுநர் செயலாளர் தேவநீதிதாஸ் கூறியதாவது: -
புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்து பள்ளி சிறுவர்கள் வாரத்திற்கு ஒருநாள் தங்கள் வீடு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் வாரம் ஒரு நாள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும் என்றார்.
- சுந்தரபாண்டியன்