ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தை வீதியைச் சேர்ந்தவர் மரகதம் (55). இவரது கணவர் முத்துசாமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருமணம் ஆகி வெளியூர்களில் உள்ளனர். முத்துசாமி இறந்துவிட்டார். மரகதம் மட்டும் அதே பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மூதாட்டியிடம் தங்க நகைகளுக்கு பாலிஷ் போட்டுத் தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதை உண்மை என்று நம்பிய மரகதம் தனது கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைக் கழற்றி அந்த வாலிபர்களிடம் கொடுத்துள்ளார். நகையை வாங்கியதும் அந்த வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்து ஓடி விட்டனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மரகதம் கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அவர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மூதாட்டியிடம் ஏழு பவுன் நகை திருடியது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அருண்குமார் (26), கன்னியா பிரசாத் (43) ஆகிய இருவரை கோவை சரவணம்பட்டி போலீசார் வாகன சோதனையின் போது கைது செய்தனர். இவர்கள் இருவரும் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தங்கியிருந்ததும் இவர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 7 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.