சிதம்பரம் நகராட்சி குடிநீர் குழாய், மீட்டர் அமைத்தது, வடிகால் பணியில் ரூ 7 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் உள்ள 5300 வீடுகளுக்கு புதிய பித்தளையிலான குடிநீர் குழாய், குடிநீர் மீட்டர் பொறுத்தி குடிநீர் இணைப்பு கொடுக்கவேண்டும். ஆனால் குடிநீர் வடிகால் அதிகாரிகள் 500க்கும் குறைவான வீடுகளுக்கு பிளாஸ்டிக் குடிநீர் குழாய், குடிநீர் மீட்டரை பொருத்திவிட்டு மீதியுள்ள வீடுகளுக்கு பொருத்தப்பட்டுள்ளதாக கணக்கு கட்டி ரூ1 கோடியே 20 லட்சத்தை ஊழல் செய்துள்ளனர். மேலும் நளன்புத்தூர் கிராமத்தில் குடிநீர் கிணறு அமைத்தது, பாதள சாக்கடை திட்டம் உள்ளிட்டவைகளில் ஊழல் நடக்கிறது. தரமான பொருட்களை கொண்டு கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சிதம்பரம் நகர வர்த்தக சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சிதம்பரம் நகருக்கு வருகை தந்த தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டதை நடத்தினார்கள்.
இச்சம்பவத்தை தொடர்ந்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் சதிஷ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இதுகுறித்து ஆய்வு செய்து மேற்கண்ட பணிகளில் ரூ 7 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் காசிநாதன், விஜயலட்சுமி. உதவி செயற்பொறியாளர்கள் விஜயக்குமார், பாண்டியன், அசோகன் ஆகியோர் மீதும் சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர் மீதும் மோசடி,கூட்டுகொள்ளை உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கு பதிந்துள்ளது கடலூர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், தமிழக முழுவதும் நடைபெறும் குடிநீர் வடிகால் வாரிய திட்டப்பணிகளில் தரமற்ற பொருட்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனையொட்டி தான் சிதம்பரம், மற்றும் ஆத்தூர் நகராட்சியில் தரமற்ற பொருட்களை பயன்படுத்தி பல கோடிகளை சுருட்டியுள்ளனர். சிதம்பரம் நகராட்சியில் நடைபெற்று வரும் பாதள சாக்கடை பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நடந்து வரும் பணிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வழக்கு பதிவு செய்யப்பட்ட பொறியாளர்களிடம் இதுகுறித்து கேட்ட போது திட்டபணிகளில் என்ன கொடுத்துள்ளதோ அதனை செய்துள்ளோம். குடிநீர் குழாய்,மீட்டர் குறித்து தகவல் அறியும் சட்ட மூலம் கேட்டு இருந்தார்கள் அதற்கான விளக்கத்தை எழுத்து மூலமாக தெளிவாக கொடுத்துள்ளோம். சிலர் தொழிற்நுட்ப ரீதியில் புரிந்துகொள்ளமுடியாமல் குற்றசாட்டை கூறி வருகிறார்கள். வழக்கின் விசாரணையில் இதுகுறித்து எடுத்து கூறுவோம் என்றார்.