திருச்சி மாவட்டம் துறையூர் கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மா.வெ. மகாபதஞ்சலி என்ற 5ஆம் வகுப்பு மாணவன் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் கல்வி அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், தான் படித்துவரும் பள்ளிக்கு கணிணி எழுத்துப் பயிற்சி, நடனம், இசை, யோகா, தற்காப்பு பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறையுடன் தனியார் பள்ளிக்கு இணையாக தரம் உயர்த்த 2018 - 2019 இல் கிராமசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான எண்களைக் கோடிட்டு கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்த வயதில் கிராமசபை கூட்டத்திற்குச் சென்ற மாணவன் மகாபதஞ்சலி, அங்கு நிறைவேற்றிய தீர்மானத்தை தற்போது செயல்படுத்த முதலமைச்சருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். மேலும், அரசுப் பள்ளி நம் பள்ளி, அரசுப் பள்ளியில் பயின்று ஜனாதிபதியான டாக்டர் அப்துல் கலாம், விஞ்ஞானி சிவம் உள்பட பல ஆட்சியர், ஆசிரியர், மருத்துவர் மற்றும் பல உயர்ந்த பதவியை அடைந்துள்ளனர் என்று தன்னுடைய (அரசு) பள்ளியின் பெருமையைப் பறைசாற்றி பதாகை வைத்துள்ளார்.