Skip to main content

56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - ஆட்சியர் அறிவிப்பு!

Published on 10/08/2020 | Edited on 10/08/2020

 

Cuddalore


கடலூர் மாவட்டத்தில் புதிதாக 11 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி உத்தரவிட்டுள்ளார். 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "நடப்பு குறுவை பட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை துவங்கியுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று 2019-2020 கொள்முதல் பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் முதல்கட்டமாக 16 இடங்களிலும், இரண்டாம் கட்டமாக 10 இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 


தற்போது மூன்றாம் கட்டமாக புவனகிரி மற்றும் ஸ்ரீமுஷ்ணம் வட்டாரத்தில் தலா ஒரு கிராமங்களிலும், விருத்தாசலம் வட்டத்தில் 4, சிதம்பரம் வட்டத்தில் 3, காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் 2 என 11 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இதுவரை 56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

நடப்பு கொள்முதல் பருவத்திற்கு மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 1,835 ரூபாயுடன் தமிழக அரசின் போனஸ் தொகை ரூபாய் 70 சேர்த்து மொத்தம் 1,905 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதே போன்று சாதாரண ரகத்திற்கு மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 1,815 ரூபாயுடன் தமிழக அரசு போனஸ் தொகையாக அறிவித்த 50 ரூபாயும் சேர்த்து 1,085 ரூபாய் வழங்கப்படும். 

 

குறுவை நெல் அறுவடை செய்துள்ள விவசாயிகள், அருகில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது 

 


.

சார்ந்த செய்திகள்