தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், 'ஏற்றமிகு 7 திட்டங்கள்' என்ற பெயரில் நலத்திட்டங்களை அவர் இன்று துவக்கி வைத்தார். சென்னை அண்ணா நினைவு நூலக அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
சமூக நலத்துறையில் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம், திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை பட்டா, நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற தனியார் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், சிறந்த தரமான மருத்துவம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் 1,136 கோடியில் 44 மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா என ஏழு திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் பேசுகையில், ''ஓராண்டு காலத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசு செயல்படுத்தி உள்ள திட்டங்களால் தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்றுள்ளது. மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் மூலம் பெண்கள் பொருளாதார தன்னிறைவு பெற்றுள்ளனர். தமிழகத்திற்கு ஏராளமான தொழில் முதலீடுகள் வந்துள்ளது. இளைஞர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றும் வகையில் நான் முதல்வன் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இலக்கை நோக்கிய பயணத்தில் வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்கிறோம். நாளை எனது 70வது பிறந்த நாள். சுமார் 52 ஆண்டுக்காலம் அரசியலுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன்'' என்றார்.