Skip to main content

5 கிலோ தங்கம் கொள்ளை விவகாரம்; கார் மீட்பு 

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

5 kg gold case Car recovery

 

கோவை ராஜ வீதியில் பிரசன்னா (40) என்பவர் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நகைக் கடைக்குத் தேவையான 5 கிலோ எடையுள்ள பல்வேறு புதிய நகைகளைப் பெங்களூரிலிருந்து வாங்கிக் கொண்டு கார் மூலம் நேற்று இரவு கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் கடை பணியாளர்கள் விஜயகுமார் (46), சுரேஷ்குமார் (45), ஜெய்சன் (40) ஆகியோர் இருந்தனர். 

 

அப்போது தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி ஆற்று மேம்பாலம் அருகே பூலாம்பட்டி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் 2 கார்களில் வந்த மர்ம நபர்கள் பிரசன்னா வந்த காரை வழிமறித்து காரின் சைடு கண்ணாடிகளை உடைத்து நொறுக்கி அவர்கள் எடுத்து வந்த ஐந்து கிலோ நகைகள் மற்றும் பிரசன்னா வந்த காரையும் கடத்திச் சென்றனர்.

 

இதுகுறித்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் பிரசன்னா அளித்த புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில், பல மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கொள்ளைச் சம்பவம் நடந்த இடத்தில் சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளைச் சம்பவம் நடந்த இடத்திலிருந்து கொள்ளையர்கள் பயன்படுத்திய இரும்புக் கம்பி, செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நகைகளுடன் கொள்ளையர்கள் தப்பிய நிலையில், அவர்கள் விட்டுச் சென்ற கார் கொல்லாபுரியம்மன் கோவில் அருகே மீட்கப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்