இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முதற்கட்டமாக ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறது. அதேபோல் திமுக பணிக்குழு உறுப்பினர்களுடன் திமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கக் காத்திருக்கிறது. இந்நிலையில் பாஜக - அமமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், தற்போது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமமுக போட்டியிட விருப்பமான 22 தொகுதிகள் அடங்கிய பட்டியலை டெல்லி பாஜக தலைமைக்கு அனுப்பி உள்ளதாகவும் அதில் தேனி, சிவகங்கை, திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, அரக்கோணம், ஆரணி, தென் சென்னை, வடசென்னை, சேலம், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தொகுதிகள் இடம்பெற்றுள்ளது எனவும் கூறப்படுகிறது. இதனால் தற்போது பாஜக - அமமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.