சேலத்தில் போலி ஆன்லைன் நிறுவனம் கிரிப்டோகரன்சி பெயரில் 18 லட்சம் ரூபாய் சுருட்டிய புகார் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சேலம், அரிசிபாளையத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (22). இவருடைய செல்போனுக்கு 21.8.2022 அன்று ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிகளவில் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. இதை நம்பிய பார்த்திபன், அதில் கொடுக்கப்பட்டு இருந்த ஆன்லைன் இணைப்பை தேர்வு செய்து விவரங்களைத் தேடிப்பார்த்துள்ளார். அதில் குறைந்தபட்ச முதலீடாக 20,252 அமெரிக்க டாலர் செலுத்தினால் முதலீட்டை விட இரு மடங்கு தொகை ஒரே மாதத்தில் திருப்பி வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஒரே மாதத்தில் 100 சதவீத லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் அவரும் மேற்குறிப்பிட்ட தொகையை டாலராகச் செலுத்தினார். இந்திய மதிப்பில் இத்தொகை 18 லட்சம் ரூபாய் ஆகும். ஆனால், நாட்கள் நகர்ந்ததே தவிர சொன்னபடி லாபம் தரப்படவில்லை. முதலீட்டுப் பணத்தையும் திருப்பித் தரவில்லை. அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது அது போலி எனத் தெரியவந்தது.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த பார்த்திபன், இதுகுறித்து சேலம் சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.