தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் கேரளா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்டதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவர் என மாணவர்கள்,பெற்றோர்கள், கல்வி ஆலோசகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்த நிலையில்
நாளை மறுநாள் ஞாயிற்று கிழமை தேர்வு நடைபெறுவதால் இனி தேர்வு மையங்களை மாற்றியமைப்பதில் சாத்தியமில்லை எனவே ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களிலேயே தேர்வெழுத வேண்டிய கட்டாயத்திற்கு மாணவர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பாக வெளிமாநிலங்களில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் நிதியுதவி செய்ய இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. வெளிமாநில தேர்வெழுதும் மாணவர்கள் தங்கள் நீட் ஹால் டிக்கெட்டை வைத்து இந்த தொகையை பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
நீட் தேர்வுமைய விவகாரத்தில் இருக்கும் சிக்கல் மற்றும் மாணவர்களின் பொருளாதார பிரச்சனையை பற்றி இன்று முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இந்த 1000 ரூபாய் உதவி தொகையானது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் செயல்படுத்தபடும் எனவும் செய்திகள் வந்துள்ளன.