நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் அருகே விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற மின் உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
வள்ளியூரை அடுத்த சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் அரிச்சந்திரன். இவர் தனது விவசாய நிலத்திற்கு புதிதாக மின் இணைப்பு பெற தெற்கு கல்லிகுளத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மின் இணைப்பு வழங்க உதவி செயற்பொறியாளராக இருந்த மோகன்குமார் என்பவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் அரிச்சந்திரன் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார். அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவற்றை உதவி செயற்பொறியாளர் மோகன்குமார் லஞ்சமாக பெரும்பொழுது சுற்றி வளைத்து கையும் களவுமாக கைது செய்தனர்.
அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை என்ற இடத்தில் பட்டாவில் பெயர் மாற்றம்செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார். அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் நில பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் என்பவரை அணுகி உள்ளார். அப்போது பட்டா பெயர் மாற்றம் செய்துதர எட்டாயிரம் ரூபாய் செலவாகும் என துரைராஜ் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சுப்பிரமணியன் புகார் அளித்ததை அடுத்து குஜிலியம்பாறை அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் துரைராஜிடம் லஞ்ச பணத்தை சுப்பிரமணி ரசாயன கலவை தடவிக்கொடுத்த பொழுது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.