அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பேச்சுவார்த்தைகள் முட்டல் மோதலில் தொடங்கி வழக்குகள் எனத் தொடர்ந்து தற்பொழுது எடப்பாடி பழனிசாமி வசம் கட்சியையும் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது. மறுபுறம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் தான் என ஓபிஎஸ் தரப்பு மாநாடு, டிடிவியுடன் சந்திப்பு என இரண்டாவது ரவுண்டுக்கு தயாராகி வருகிறது.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “ஓபிஎஸ் டி.டி.வி. தினகரனை சந்தித்து பேசியுள்ளார். எல்லா ஊடகத்திலும் இந்த செய்தி வந்துள்ளது. இதில் பல்வேறு கருத்துக்களை அவர்கள் சேருகின்றபோது தெரிவித்திருக்கிறார்கள். எங்களைப் பொறுத்த வரைக்கும் மாயமானும் மண் குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது. பூஜ்ஜியம் பிளஸ் பூஜ்ஜியம் இஸ் ஈக்குவல் டூ பூஜ்ஜியம். அப்படித்தான் அவர்களுடைய இணைப்பு” எனக் கூறி இருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திடம் செய்தியாளர்கள், ஓபிஎஸ் உடன் மற்றவர்கள் செல்லாதது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வைத்திலிங்கம், “டிடிவியை சந்திக்க செல்லும்போது நாங்கள் தான் அவர்களை செல்லச் சொன்னோம். முதன் முதலில் சந்திக்கும் போது கும்பலாக போய் சந்திப்பதை தவிர்த்து ஓபிஎஸ் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் சென்றால் போதும் என்று நாங்கள் தான் சொன்னோம். டெல்லிக்கு சென்ற இபிஎஸ் திண்டுக்கல் சீனிவாசனை, நத்தம் விஸ்வநாதனை, ஆர்.பி.உதயகுமாரை ஏன் அழைத்து செல்லவில்லை.
மாயமானையும் மண் குதிரையும் நம்பி சென்றால் கரை சேர முடியாது என்று சொல்கிறார். அந்த மாயமான் இல்லை என்றால் இன்று முதலமைச்சர் ஆகி இருக்க முடியாது. தூது விட்டு காலில் விழுந்து முதலமைச்சராகி அவரையே நாய் என்றும் மாயமான் என்றும் துரோகி என்றும் வாய்க்கு வந்த வார்த்தைகளை எல்லாம் பேசும் எடப்பாடி தன் முந்தைய காலத்தை கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும். மண் குதிரை என்கிறார். இவர் ஒரு சண்டிக்குதிரை. சண்டிக்குதிரை எதற்கும் பயன்படாது.
அதிமுக வலிமை பெற வேண்டும், ஒற்றுமை பெற வேண்டும். ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு. நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என நாங்கள் சிந்திக்கிறோம். ஆனால் அன்று முதலமைச்சராக ஆக்கிவிட்டவரையே சூரியனை பார்த்து நாய் குரைப்பது போல் என்கிறார். இபிஎஸ் தனது சுயநலத்தால் பதவி மோகத்தால் அதிமுகவை அழிக்க நினைக்கிறார். எடப்பாடி பழனிசாமியை தவிர்த்துவிட்டு அதிமுக ஒன்றுபடும்” எனக் கூறினார்.