சொத்துவரி உயர்வைக் கண்டித்தும், மின்கட்டணம், பால் விலை ஆகியவற்றின் உயர்வைக் கண்டித்தும் பரவையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக மக்கள் எந்த மகிழ்ச்சியும் அடையவில்லை. தொழில்துறையில் பின் தங்கிவிட்டோம். நீட் தேர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது. நீட் ரத்து செய்வோம் என்று கூறினார்கள். அதுவும் இல்லை. ஆட்சியில் அமர்ந்து 2 வருடங்கள் ஆகிற்று. நாங்கள் கொண்டு வந்த மாதிரி எதாவது திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்களா. விலைவாசி அனைத்தும் உயர்ந்துள்ளது.
குஜராத்தைப் பொறுத்தவரை அமித்ஷா மற்றும் பிரதமரின் சொந்த ஊர். அங்கு பாஜக அதிகமாகவே உள்ளது. அதன் பின் அங்கிருக்கும் தமிழர்கள் பிரதமரின் நடவடிக்கையைப் பாராட்டி மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத் தமிழர்கள் ஓட்டளித்துள்ளனர். அதன் பிரதிபலிப்பு அனைத்துத் தேர்தலிலும் இருக்குமா எனச் சொல்ல முடியாது. கூட்டணி அமைவதை வைத்துத்தான் சொல்ல முடியும். இன்று பாஜக வளர்ந்து வருகிறது. அவர்கள் அதிமுகவுடன் சேர்ந்தால் அது மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும். அது அவர்களது கைகளில் தான் உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் கூட்டணி எல்லாம் பேசப்படும்.
கட்சியிலிருந்து தாவியவர்களைப் பற்றி எல்லாம் பேச முடியாது. கோவை செல்வராஜ் கட்சி தாவியதைப் பற்றிக் கேட்கிறீர்கள். கோவை செல்வராஜ் காங்கிரசில் இருந்து வந்தவர். எங்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்று திமுகவில் இணைந்து அமைச்சராகவும் இருக்கின்றனர். கட்சி பிடிக்கவில்லை என்று இன்னொரு கட்சியில் இணைவது அவர்களது சொந்த விருப்பம்” என்றார்.