சாத்தாங்குளத்தில் போலீசால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற நேரில் சென்றார் தி.மு.க.இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இப்போது இது அரசியலாக்கப்பட்டிருக்கிறது. இ.பாஸ் இல்லாமல் சென்னையிலிருந்து உதயநிதி எப்படிச் சென்று வந்தார் என அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது சம்பந்தமாக அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் ஈரோடு யுவராஜா நம்மிடம் பேசியதோடு அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "நாளுக்கு நாள் தமிழ் நாட்டில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், குறிப்பாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. வெளியில் செல்ல வேண்டும் என்றால், இ-பாஸ் கட்டயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் காவல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள் தற்போது தமிழகத்தில் 5ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து, சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோரை, உரிய பரிசோதனைக்கு பின் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மேலும் ஒவ்வொரு மாவட்டங்களில், கரோனா தடுப்பு சிறப்பு மையங்களை ஏற்படுத்தி 14 நாட்கள் தனிமைப்படுத்துகிறார்கள்.
ஒவ்வொரு மாவட்ட நிர்வாகங்களை தமிழக அரசு முடுக்கிவிட்டு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்த சூழ்நிலையில், தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முறையாக தனது பெயரில் இ- பாஸ் பெறாமல் சென்னையிலிருந்து சாத்தாங்குளத்திற்குச் சென்று இறந்து போன ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டுக்குப் போய் நேரில் ஆறுதல் கூறியுள்ளார்கள்.
நோயின் தாக்கம் அதிகமாக பரவும் இந்தச் சூழ்நிலையில் திரு/ உதயநிதி அவர்கள் இ- பாஸ் இல்லாமலேயே எப்படி அங்குச் சென்றார்?, அவரை செக் போஸ்ட் காவலர்கள் எவ்வாறு அனுமதித்தார்கள். எத்தனையோ பேருக்கு நியாயமான காரணம் இருந்தும் மறுக்கப்படும் இ - பாஸ் இவருக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது?, மாவட்டம் விட்டு மாவட்டம் டூவீலரில் கூட முறையான இ- பாஸ் இல்லாமல் போகக் கூடாதுன்னு சட்டம் போட்டுள்ள நிலையில் அது காற்றில் பறந்த மாயம் என்ன?, அங்கு அவர்கள் சமூக இடைவெளி கூட முறையாக பின்பற்றவில்லை.
சாதரணமா சென்னை மக்களை மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தி பரிசோதனை நடத்தி முடிவு வரும் வரை ஒரு நாள் தனிமைப்படுத்தி (கொரண்டைன்) வைத்து சொந்த வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது ஆனால் இதையெல்லாம் உதயநிதி பின்பற்றினாரா? நோயை வைத்து, அரசியல் செய்து வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் அரசின் ஒவ்வொரு அசைவையும் குறை கூறிவருகிறார்கள். ஆனால் அவரது மகனே இவ்வாறு நடந்துகொண்டு நோய்ப்பரப்புதலுக்கு காரணமாகலாமா? உதயநிதிக்கு தனிச் சட்டமா? நோயின் தாக்கத்தை உணர்ந்து இனியாவது அரசு கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடக்குமாறு தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞர் அணிச் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ள அவரிடம் நாம், "முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் ஒவ்வோரு மாவட்ட அமைச்சர்களும் தமிழகம் முழுக்க போய் வருகிறார்களே? மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவர் நேரில் சென்று சந்தித்தால் அக்குடும்பம் இழந்த உயிர்களுக்கு நீதி கேட்க மிகப் பெரிய துணை இருக்கிறது என்று ஆறுதல் அடையுமே" என்றோம்.
அதற்கு யுவராஜ், "முதல்வர் அமைச்சர்களோடு உதயநிதியை ஒப்பிட முடியாது. அவர்கள் அரசு மற்றும் மக்கள் பணி செய்ய செல்கிறார்கள். உதயநிதி சென்றது அரசியல் தான்... இதை அவர் தவிர்த்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்து" என்றார்.